நவ., 15ல் சபரிமலை நடை திறப்பு!
சபரிமலை: சபரிமலையில், சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகள் நிறைவு பெற்று நடை அடைக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக, வரும், 15ம் தேதி நடை திறக்கப்படும். திருவிதாங்கூர் மன்னர், சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள் பூஜைகள், சபரிமலையில் ஒரு நாள் நடைபெறும். இந்த ஆண்டு, அவரது பிறந்த நாள், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக சபரிமலை நடை, கடந்த, 1ம் தேதி மாலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு நடை திறந்து, நிர்மால்ய தரிசனம் முடிந்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து நெய்யபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜையாக, 1,001 கலசம் பூஜிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 10:00 மணிக்கு, மேல்சாந்தி தாமோதரன் போற்றி, நடையை அடைத்தார்.ஒரு ஆண்டாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் அவர், வரும், 15ம் தேதி மாலையில் நடை திறப்பார். அதன் பின், அவர் ஊர் திரும்பி விடுவார். ஒரு முறை சபரிமலையில் மேல்சாந்தியாக இருப்பவர் அடுத்த, 10 ஆண்டுகளுக்கு இந்த பதவிக்கு போட்டியிட முடியாது. "கடந்த ஒரு ஆண்டாக, சபரிமலையில் தங்கியிருந்த நாட்கள், என் வாழ்க்கையின் பெரும் பாக்கியம் என, தாமோதரன் போற்றி கூறினார்.