உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரங்களுக்கு சிறப்பு பூஜை

நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரங்களுக்கு சிறப்பு பூஜை

பெண்ணாடம்: விழுப்புரம் - திண்டுக்கல் இருவழி பாதை அமைக்க, பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அகற்றப்பட உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஆலரமங்களுக்கு கிராம மக்கள், ரயில்வே ஊழியர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். விழுப்புரம் - திண்டுக்கல் இடையே 273 கி.மீ., தூரத்திற்கு இருவழி ரயில் பாதை அமைக்கும் பணி, கடந்த 2009ல் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக 168 கோடி ரூபாய் மதிப்பில், 230 சிறிய பாலங்கள் உட்பட 266 பாலங்கள் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும் ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பெண்ணாடம் பகுதியில் இருவழி பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக பெண்ணாடம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் பழமையான ஏழு ஆலமரங்கள் நாளை (5ம் தேதி) வெட்டி அகற்றப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து அப்பகுதி கிராம மக்கள், ரயில்வே ஊழியர்கள், பயணிகள் ஆலமரங்களுக்கு நேற்று புது துணிகளை கட்டி, சிறப்பு வழிபாடு செய்தனர். ஒலிவியர் சுய உதவிக்குழு தலைவர் சுரேஷ்குமார், பெண்ணாடம் ரோட்டரி சங்கத் தலைவர் சண்முகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !