மஹா தீப தரிசன டிக்கெட் விற்பனை முறைகேடு!
திருவண்ணாமலை: மஹா தீப தரிசன டிக்கெட் விற்பனையின் போது, டிக்கெட் எடுத்த போலீஸாரிடமே பணம் வாங்கி, விற்பனையாளர்கள் மோசடியில் ஈடுபட்டதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, 17ம் தேதி நடக்கிறது. அதிகாலை, 4 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சி மீது, மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், கோவில் கொடி மரம் முன், அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி நடனமாடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த காட்சியை, கோவிலுக்குள் செல்லும் பக்தர்களால் மட்டுமே காண முடியும். இதைக்காண, பாதுகாப்பு கருதி கோவிலுக்குள், 10,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில், கோவில் நிர்வாகத்தினர், கட்டளைதாரர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், போலீஸார் என முக்கிய பொறுப்பில் உள்ள அரசு ஊழியர்கள் என, 9,000 பேர் வரை கோவிலுக்குள் சென்று விடுவதால், பக்தர்கள் அர்த்தநாரீஸ்வரர் நடனக்காட்சி காணமுடியாத நிலை ஏற்பட்டது.
பகர்தர்களின் நலன் கருதி, உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த, இரண்டு ஆண்டுகளாக, பாஸ் வழங்கும் முறையை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஆனால், மஹாதீப தரிசனத்துக்கு கோவிலுக்குள் செல்ல, 1,100 டிக்கெட்டுகள், 500, 600 ரூபாய் கட்டணத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் விற்பனை, நேற்று காலை, திருக்கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் நடந்தது. ஏற்கனவே, கட்டண தரிசன டிக்கெட் பெற, அடையாள அட்டை எடுத்துக் கொண்டு வர வேண்டும்; ஒருவருக்கு, ஒரு டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்படும், என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால், டிக்கெட் வாங்குவதற்காக அதிகாலை, 5 மணி முதல், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை, 10 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. சிறிது நேரம் மட்டுமே நடந்த டிக்கெட் விற்பனையில், ஒரு நபருக்கு, 10 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்பட்டு, 300 டிக்கெட் அளவிற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால், வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கட்டண தரிசன டிக்கெட் வாங்க, 15க்கும் மேற்பட்ட போலீஸாரும் வந்திருந்தனர். அவர்கள், டிக்கெட் எடுப்பவர்களை ஒழுங்கு படுத்தாமல், சினிமா டிக்கெட் எடுப்பது போல், சுவர் ஏறி குதித்து டிக்கெட் எடுத்தனர். இதில், ஒரு போலீஸாரிடம், 5,000 ரூபாய் பெற்றுக் கொண்டு, 500 ரூபாய்க்கான, நான்கு டிக்கெட்டை மட்டும் விற்பனையாளர் கொடுத்தார். மீதி பணத்தை போலீஸ்காரர் திருப்பிக் கேட்ட போது, விற்பனையாளர் கொடுக்க மறுத்து விட்டார். டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டவர், முறையாக டிக்கெட் வழங்காமல் பிளாக்கில், ஒரு டிக்கெட், 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளும் கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு, வீடு தேடிச் சென்று கோவில் நிர்வாகம் டிக்கெட் வழங்கி உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா, பத்து நாட்களும் ஒவ்வொரு கட்டளைதாரால் நடத்தப்படுவதால், அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி., பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்ற வி.ஐ.பி., பாஸ் கூடுதலாக அச்சடித்து, அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றம் உத்தரவை முறைப்படி கடைபிடிக்காமல் செயல்படும், கோவில் அலுவலர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும், என்று பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.