சுவாமி விவேகானந்தர் ரதத்துக்கு வரவேற்பு
சேலம்: சேலம், பெரியார் பல்கலைக்கு வந்த விவேகானந்தர் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த தின விழாவையொட்டி, விவேகானந்தர் ரதம், இந்தியா முழுவதும் வலம் வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு, இந்த ரதம் வருகை தந்த போது, சேலம் பெரியார் பல்கலைக்கழக, சுவாமி விவேகானந்தர் கல்வி மையம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்துடன் இணைந்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அங்கமுத்து தலைமை வகித்தார். ஸ்ரீகோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அர்த்தநாரி, சுவாமி விவேகானந்தர் கல்வி மைய இயக்குனர் (பொறுப்பு) ராம்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டு, தேச ஒருமைப்பாட்டுக்கும், மத சகிப்புத்தன்மைக்கும், உறுதிமொழி ஏற்று, சுவாமி விவேகானந்தரின் உருவத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர். சுவாமி விவேகானந்தர் குறித்து நாமக்கல் கவிஞர் பாடிய பிரார்த்தனை பாடலை, சேலம் ஜெயமணி மற்றும் மாணவியர் பாடினர். இதில் சேலம் ராமகிருஷ்ண ஆஸ்ரம செயலாளர் யதாத்மானந்தர், பக்திவிரதானந்தர், சுவாமி வீரபத்ரானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.