குத்தாலம் அருகே அம்பாள் சிலை கண்டெடுப்பு
மயிலாடுதுறை: குத்தாலம் அருக, அம்பாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. நாகை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கோமல் வடக்கைச் சேர்ந்தவர் சேகர், 62. இவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள, மூங்கில் குத்து, நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் சாய்ந்தது. நேற்று மாலை, பொக்லைன் இயந்திரம் மூலம், அந்த மூங்கில் குத்தை தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. அப்போது மண் எடுத்த குழியில், கருங்கல்லாலான, 6 அடி உயர அம்பாள் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே, சிதிலமடைந்த நிலையில் பெருமாள் சிலை ஒன்று இருப்பதால், தற்போது கண்டெடுக்ககப்பட்ட சிலை, பூதேவி சிலையாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. குத்தாலம் தாசில்தார் வசந்தி, சிலையை அலுவலகத்திற்கு எடுத்து சென்றார். சிலையை பற்றி தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் வந்து பார்த்த பின், சிலையை பற்றிய மற்ற விவரங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.