செவலபுரை திரவுபதியம்மன் கரிக்கோல ஊர்வலம்
செஞ்சி: செவலபுரை திரவுபதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சாமி கரிக்கோல ஊர்வலம் நடந்தது. செஞ்சி தாலுகா செவலபுரையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்க உள்ளது. நேற்று பகல் 10 மணிக்கு திரவுபதியம்மன், கிருஷ்ணர், தருமர் மற்றும் கோபுர கலசம் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. செவலபுரை மற்றும் மண்ணூர் கிராமங்களில் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு விசேஷ ஆராதனையுடன் வேத பிரபந்த தொடக்கமும், நாளை 21ம் தேதி காலை யாகசாலை பிரவேசமும், விசேஷ ஹோமங்களும் செய்ய உள்ளனர். 22ம் தேதி காலை 6 மணிக்கு மகா பூர்ணாஹீதியும், 6,30 மணிக்கு கடம் புறப்பாடும், 7 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. பகல் 2 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், துணை தலைவர் ரமேஷ் மற்றும் செவலபுரை, ராமகிருஷ்ணாபுரம், தாதிகுளம், தாதங்குப்பம், சிறுவாடி, சித்தாத்தூர் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.