தெய்வ குற்றம் காரணமா?: திருப்பதி பக்தர்களுக்கு புது கவலை!
திருப்பதி: திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில், தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக, அசம்பாவிதம் நடைபெற்று வருகிறது. திருப்பதியை அடுத்த, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், கார்த்திகை மாதத்தில், வருடாந்திர பிரம்மோற்சவம், நடைபெறும். கடந்த, நான்கு ஆண்டுகளாக, பிரம்மோற்சவம் துவங்கும் முன், செய்யப்படும் முன்னேற்பாடுகளில், ஏதோ ஒரு வகையில், அசம்பாவிதம் நடைபெற்று வருகிறது. கடந்த, 2010ல், கோவில் கோபுரத்தில் வெள்ளையடித்த போது, ஊழியர் ஒருவர் கீழே விழுந்து இறந்தார். 2011ல், கோவிலின் மீதிருந்து விழுந்த ஊழியருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. 2012ல், புதியதாக செய்யப்பட்ட, தங்க ரதம் சோதனை ஓட்டத்தின் போது, தேர் சக்கரம் ஏறி, தமிழக பக்தர் கால் முறிந்தது. நடப்பு ஆண்டில், தற்போது பிரம்மோற்சவ ஏற்பாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் போது, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கோபாலின் மனைவி, வழுக்கி விழுந்ததில், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சாதாரண ஊழியரில் துவங்கி, அதிகாரி வரை, அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருவதால், "தெய்வ குற்றம் நிகழ்ந்திருக்கலாம் என, பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.