தூத்துக்குடியில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர் சுவாமியின் அருளுரை
தூத்துக்குடி : தூத்துக்குடி நாமாத்வார் பிரார்த்தனை மையம் சார்பில், ஸ்ரீ ஸ்ரீ முரளிதர் சுவாமியின் ஸ்ரீமத்பாகவதம் குறித்த அருளுரை நேற்று சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி மாணவிகளின் கடவுள் வாழ்த்துபாடலுடன் தொடங்கிய 7- நாட்கள் அருளுரையின் முதல் நாளான நேற்று முரளிதர் சுவாமி, ஸ்ரீமத் பாகவதம் பிறந்த கதையை பக்தர்களுக்கு அருளினார். அவருடைய சொற்பொழிவில், "" கைமிஸாரண்யம் என்ற இடத்தில் சவுனகாதி மகரிஷிகள் தொடர் யாகம் ஒன்று நடத்தினர். அதில் இடை வேளை நேரங்களில் சூத்தர் என்பவர் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகளை அவர்களுக்கு கூறினார். அதன் தொடர்ச்சியாக சுகர் என்ற யோகி பரிசத்துக்கு கூறிய கதையையும் கூறினார். அதுவே ஸ்ரீமத்பாகவதம் ஆகும். இது முழுவதும் பக்தர்களின் கதையை மட்டுமே கூறுகிறது. தவிர கிருஷ்ணரின் குழந்தை பிராயத்து கதைகளையும், லீலைகளையும் நமக்கு பாகவதமே கூறுகிறது. அதுமட்டுமல்ல மனிதர்கள் வேண்டும் அமைதி அவர்களுக்குள்ளே இருக்கிறது, அதை பக்தியின் மூலமே ஒவ்வொருவரும் பெறமுடியும், அந்த பக்தியை அருளும் நூல் இந்த பாகவதம் அதனாலேயே, பதினெட்டு புராணங்களிலும் பாகவதம் சிறந்ததாக விளங்குகிறது. இதன் இறை வணக்கப்பாடலில் வழக்கமாக அனைவரையும் போல் குருவையோ, விநாயகரையோ அழைத்துப் பாடாமல் அண்டசராசரமும் யாரிடம் தோன்றியதோ, அதை யார் ஒரு ஒழுங்கில் நடத்துகின்றாரோ, பிரளய காலத்தில் அதை தன்னுள் ஒடுக்கிக் கொள்கின்ற பரமாத்வை வணங்குவோம் என்று சிலந்தி பூச்சி போல தன்னுள் இருந்து அண்டசராசரத்தை தோற்றுவித்த பராமாத்வை பாகவதம் வணங்கி, பக்தர்களின் வாழ்க்கை கதையை தொடங்குகிறது. இந்த கதைகளை கேட்பது தியானம் செய்வதற்கு சமமானது. எனவே அனைவரும் ஸ்ரீமத் பாகவதம் கூறும் கதைகளை கேட்டு தியானத்தினால் கிடைக்கும் நன்மைகளை பெற வேண்டும்.என்று முரளிதர் சுவாமி கூறினார். முன்னதாக பள்ளி செயலாளர் நடசேன் வரவேற்றார். இன்று துருவன் சரித்திரம் குறித்த அருளுரையை பக்தர்களுக்கு வழங்குகிறார்.