வேங்கடேஷ பெருமாள் கோயிலுக்கு வாடிக்கையாக வரும் பசு!
ஆழ்வார்குறிச்சி: வாழைபழம் தருவதற்கு தாமதமானதால் கோயிலுக்குள் பசுமாடு புகுந்தது. ஆழ்வார்குறிச்சி கீழ கிராமத்தில் வேங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு இரவு, காலை சுமார் 7.45 மணியளவில் அருகில் உள்ள வீட்டு பசுமாடு கோயிலுக்கு வந்து வாசலில் நிற்கும். பசு வந்ததை அறிந்த அர்ச்சகர் ஒரு வாழைப்பழம் கொடுத்தவுடன் மாடு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிடும். இது சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை பசுமாடு கோயில் வாசலில் வந்து நின்றது. நேற்று அமாவாசை என்பதால் அர்ச்சகர் உள் நடையை சாத்திவிட்டு தர்ப்பணம் செய்வதற்காக வெளியே சென்றிருந்தார். வழக்கம் போல் அந்த பசுமாடு சிறிதுநேரம் வாசலிலேயே நின்று கொண்டிருந்தது. அர்ச்சகர் உள்ளே இல்லாத நிலையில் பசுமாடு அங்கேயே நின்றது. திடீரென பொறுமை இழந்த அந்த பசு வேகமாக கோயிலுக்குள் நுழைந்தது. கோயிலில் உள்ளேயும் சற்றுநேரம் பொறுமையாக இருந்து கொண்டிருந்த அந்த பசு அர்ச்சகர் இல்லாத நிலையில் அருகில் இருந்த இலையையும், புல்களையும் தின்றது. வெளியே சென்ற அர்ச்சகர் வருவதற்கு சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக ஆன நிலையில் கோயிலை விட்டு பசு வெளியே வரவேயில்லை. தனது பணியை முடித்துவிட்டு அர்ச்சகர் வந்தவுடன் பசு உள்ளே நிற்பதை பார்த்து வழக்கம் போல் வாழை பழத்தை எடுத்து வந்தார். வாழைபழம் தர தாமதமானதால் பசு முதலில் கொடுத்தவுடன் வாங்க மறுத்துவிட்டது. பின்னர் அர்ச்சகர் பசுவை சமாதானப்படுத்தி பழத்தை கொடுத்து கோயிலில் இருந்து வெளியே அழைத்து வந்தார். கோயில் வாசலில் பசு வந்து நின்ற காட்சி, உள்ளே சென்று வெகுநேரம் நின்ற காட்சி, அர்ச்சகர் வாழைபழத்தை கொடுத்து சமாதானப்படுத்திய முயற்சி பார்ப்போரை பரவசமடைய செய்தது.