திருச்செந்தூர் கோயிலில் திருவனந்தபுரம் பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திரு வனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து வழிபட்டனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம். 15-வது ஆண்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குருசாமி சோமன் சாமிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரர் கோவிலில் இருந்து கடந்த 29ம் தேதி பாதயாத்திரையாக புறப்பட்டு, நெய்யாற்றங்கரைக்கு வந்து, அங்கிருந்து திருச்செந்தூருக்கு வந்தனர். கடந்த 1ம் தேதி மாலையில் திருச்செந்தூர் தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பறவை காவடி மற்றும் சுரியக்காவடி எடுத்து மேலரதவீதி, வடக்குரதவீதி, கீழரதவீதி, சன்னதித்தெரு வழியாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர். நேற்று காலை பக்தர்கள் வேல்காவடி எடுத்தும், அலகு குத்தி பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் இன்று மாலை பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அக்னி காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.