உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கடைகளுக்கு புதிய வாடகை நிர்ணயம்!

கோவில் கடைகளுக்கு புதிய வாடகை நிர்ணயம்!

திருப்பூர்: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் கடைகள், மனைகளுக்கு புதிய வாடகை நிர்ணயம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மண்டலத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏழாயிரம் கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு முன் பகுதியிலும், சொந்தமான இடங்களிலும் கடைகள், மனைகள் வாடகை அடிப்படையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் என்பதால்,சொற்ப அளவிலான தொகையே வசூலாகி வந்தது. கோவில்களுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில், மார்க்கெட் மதிப்பு, பதிவு துறை வழிகாட்டி மதிப்பு, ஆகியவற்றில் எது அதிகமோ; அதனை, நியாயமான வாடகையாக நிர்ணயிக்க வேண்டும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், 2001ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு நிலுவை தொகையை வசூலிக்கவும்; ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் கூடுதல் தொகை நிர்ணயித்து; உடனடியாக வாடகை நிர்ணயித்து, நோட்டீஸ் வழங்கி, ஒரு சில நாட்களுக்குள் வசூலிக்கவும்; வாடகை தொகை செலுத்தாதவர்களை காலி செய்ய வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான கடைகள், மனைகளுக்கு நியாய வாடகை நிர்ணயிக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவில்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவில் கடைகள், மனைகளை வாடகைக்கு எடுத்தவர்கள், குறைந்தளவு தொகை வாடகையாக கொடுத்து வந்ததோடு, அதிலும் பல ஆண்டு நிலுவை வைத்துள்ளனர். கடந்த 2001ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு, மார்க்கெட் மதிப்பில் திடீரென வாடகை உயர்த்தப்படுவதோடு, 12 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையும் செலுத்த வேண்டியள்ளதால், வாடகைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !