உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணவாள மாமுனிகள் நினைவிடம் ஆக்கிரமிப்பு: ஜீயர் கோரிக்கை!

மணவாள மாமுனிகள் நினைவிடம் ஆக்கிரமிப்பு: ஜீயர் கோரிக்கை!

சென்னை: வைணவர்களின் குருவாகப் போற்றப்படும், மணவாள மாமுனிவரின், ஸ்ரீரங்கம் நினைவிடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தலைமை செயலகத்தில் உள்ள, முதல்வர் தனிப் பிரிவில், கோரிக்கை மனுவையும் நேற்று அவர் அளித்தார். எம்பார் ஜீயர் மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர், இவ்விவகாரம் குறித்து கூறியதாவது: வைணவர்களின் குருவாக, மணவாள முனிவர் திகழ்கிறார். 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர், ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் கிடாரம் என்ற ஊரில் பிறந்தவர். அங்கு, சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் சுற்றுச்சுவரை இடித்து, நெடுஞ்சாலை துறை சாலை அமைக்க திட்டமிட்டு வருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள இக்கோவிலின், ஒரு பகுதியை இடிப்பது, சட்டத்துக்கு புறம்பானது. அதேபோல், மணவாள முனிவரின் உடல், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. மணவாள மாமுனிவரின் நினைவிடம், பக்தர்களின் வழிபாட்டுத் தலமாகவும் உள்ளது. இப்பகுதியை, தனியார் ஆக்கிரமித்து, வழிபாட்டுக்கு இடையூறு செய்து வருகின்றனர். எனவே, முதல்வர் தலையிட்டு, சிக்கல் கிடாரம், சுந்தரராஜ பெருமாள் கோவில் பகுதியை, நெடுஞ்சாலை துறை அகற்ற முற்படுவதைத் தடுக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவிடங்களை, அரசே ஏற்று பராமரிப்பது போல, மணவாள மாமுனிவரின் நினைவிடத்தையும், அரசு ஏற்று பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !