உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி நாளை 17ம் ததி தேரோட்டம் நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி சுவாமி - அம்பாளுக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளும், காலை பஞ்சமூர்த்திகளும், இரவு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமி சிறப்பு வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. நாளை 17ம் தேதி தேரோட்டத்தையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் நடராஜர் சித்சபையில் இருந்து புறப்பாடு செய்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர் நான்கு வீதிகள் வலம் வந்து நிலைக்கு வரும். தொடர்ந்து சுவாமி அம்பாள் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளி இரவு 8 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. 18ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் அதிகாலை 4 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் திருவாபரண அலங்கார ஊஞ்சல் காட்சி, சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று, மதியம் 2 மணிக்கு ஆனந்த நடராஜர் ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி முருகன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !