பழநி கிரிவீதியில் தனியார் யானை வசூல்வேட்டை: பக்தர்களுக்கு இடையூறு!
பழநி: பழநி கிரிவீதி ரோட்டில் யானையை வைத்து ஆசிவழங்கி பணம் வசூலிப்பதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பழநி கோயிலுக்கு மார்கழி, சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கிரிவீதியில், பேன்சி பொருட்கள், சுவாமி சிலைகள், அபிஷேக பொருட்களை, தள்ளுவண்டி, கூடைகளில் வைத்து விற்கின்றனர். இதனால் பக்தர்கள் கிரிவலப்பாதையில் இடையூறு ஏற்படுகிறது. தனியார் யானையை கிரிவீதி, திருஆவினன்குடி அருகேயும் நிறுத்தி பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில், ஆசிவழங்கி வசூல் பார்க்கின்றனர். யானைகளை துன்புறுத்தும் வகையில் ஆசிவழங்க தடையுள்ளது. இவ்விஷயத்தில், வனத்துறையினர், போலீசார் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்திரவிட வேண்டும். இதுகுறித்து வனரேஞ்சர் கணேசன் கூறுகையில்,"யானைகள் மூலம் ஆசிவழங்க தடையுள்ளது. சென்னையிலுள்ள வனஉயிரின பாதுகாப்பாளரிடம் அனுமதி பெறவேண்டும். பக்தர்களுக்கு இடையூறாக, யானையை துன்புறுத்துவது, தொடர்பாக புகார் வரவில்லை, வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.