சபரிமலையின் பழங்கால போட்டோ: பக்தர்கள் வியப்பு!
சபரிமலை: மறைந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா சபரிமலையில் எடுத்த பழங்கால போட்டோவை இன்றைய சபரிமலையுடன் ஒப்பிட்டு பக்தர்கள் வியப்படைகின்றனர். திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா கடந்த 16-ம் தேதி அதிகாலையில் காலமானார். அதிக காலம் இவர் நாட்டை ஆளவில்லை என்றாலும் அவர் மக்கள் மற்றும் ஜனநாயக அரசுகளின் மனம் கவர்ந்த மன்னராக திகழ்ந்தார். திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க புதையல் கண்டெடுக்கப்பட்ட போது அது சுவாமியின் சொத்து என்று கூறினார். இதே நிலை எடுத்த கேரள மாநில அரசையும் அவர் பாராட்ட தவறவில்லை. சிலர் வேறு விதமாக விமர்சித்த போது பத்மனாபசுவாமி கோயிலுக்கு சென்று விட்டு வரும் போது காலில் ஒட்டியிருக்கும் மண்ணை கூட கழுவிவிட்டுதான் வீட்டுக்கு வருவேன் என்று கூறி அவர்களை வாயடைக்க செய்தார். 91 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சபரிமலையுடன் இவரும், மன்னர் குடும்பமும் நல்ல நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.
1939-ல் முதன் முறையாக உத்திராடம் திருநாள் சபரிமலை வந்தார். 1942-ல் மீணடும் தனது சகோதரர் சித்திரைதிருநாள், தாயார் சேதுபார்வதி தாயார் ஆகியோருடன் வந்தார். அன்று இந்த பம்பை ரோடு எதுவும் கிடையாது. திருவனந்தபுரத்திலிருந்து காரில் பீருமேடு, வண்டிப்பெரியாறு வந்து அங்கிருந்து 14 மைல் தூரம் நடந்தனர். தாயார் டோளியில் அழைத்து வரப்பட்டார். அப்போது ஒரு நாள் முழுவதும் சபரிமலையில் தங்கியுள்ளனர். இருமுடி கட்டு இல்லாததால் வடக்கு வாசல்வமியாக சென்று சாமி கும்பிட்டனர். அன்று கோயிலில் கொடிமரம் கிடையாது. இதை மன்னர் மார்த்தாண்டவர்மாவே அவரது குறிப்பில் எழுதியுள்ளார். கொடிமரம் இல்லாத சபரிமலையில் நாங்கள் வணங்கியது இன்று காணும் ஐயப்ப விக்ரகத்தை அல்ல, உக்ரமூர்த்தியான சாஸ்தா விக்ரகத்தை கும்பிட்டோம் என்று எழுதியுள்ளார். அப்போதுதான் உத்திராடம் திருநாள் தனது ரோளிபிளக்ஸ் கேமராவில் இந்த படத்தை எடுத்துள்ளார். இதன் பின்னர் 1950 வைகாசி மாதம் நான்காம் தேதி சபரிமலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு கோயில் தீக்கிரையானது. பின்னர் திருவிதாங்கூர் அரண்மனையில் தேவாரப்புரையில் இருந்த ஐயப்ப விக்ரகத்தின் மாதிரி எடுத்துதான் தற்போதைய சபரிமலை விக்ரகம் செய்யப்பட்டது. இப்போதைய சபரிமலையை பழைய சபரிமலையுடன் ஒப்பிட முடியாத அளவு மாற்றம் ஏற்பட்டு விட்டது.