மண்டலபூஜைக்கு பின்னர்.. சபரிமலை நடை மூன்று நாட்கள் முழுமையாக அடைப்பு!
சபரிமலை: சபரிமலையில் மண்டலபூஜை முடிந்து மூன்று நாட்கள் முழுமையாக நடை அடைக்கப்பட்டிருக்கும். 30-ம் தேதி மாலையில் நடை திறந்தாலும், 31 காலையில்தான் நெய்யபிஷேகம் நடைபெறும். கார்த்திகை ஒன்றாம் தேதி தமிழகத்தை விட ஒரு நாள் முன்னதாக கேரளாவில் தொடங்கி விட்டதால் சபரிமலையில் மண்டலபூஜை நாளை மறுநாள் 26-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் 27-ம் தேதி மண்டலபூஜை என்பதால் ஏராளமான பக்தர்கள் அந்த தேதியை கணக்கிட்டு சபரிமலை பயணத்திட்டத்தை வகுத்துள்ளனர். ஆனால் 26-ம் தேதி மண்டலபூஜை முடிந்து இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டு விடும். அதன் பின்னர் 27,28,29 தேதிகளில் சபரிமலை நடை முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில் துப்புரவு பணிகள் முழு வீச்சில் நடைபெறும். மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள் சன்னிதானத்தில் கொண்டு சேகரிக்கப்படும். மகரவிளக்கு காலத்துக்கு தேவையான அப்பம் மற்றும் அவரணை தயாரித்து சேமித்து வைக்கப்படும். இந்த மூன்று நாட்களிலும் பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 30-ம் தேதி காலை பத்து மணிக்கு பின்னர்தான் பக்தர்கள் பம்பையிலிருந்து மலையேற அனுமதிக்கப் படுவார்கள். எனவே தமிழகத்தில் மண்டலபூஜை தினத்தை கணக்கிலெடுத்து பயணத்திட்டம் வகுத்துள்ளவர்கள் 26-ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு முன் சன்னிதானத்துக்கு வந்து சேருவது போல் பயணத்திட்டத்தை வகுக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் பம்பையில் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மாலையில் திறக்கப்படும் நடை ஜன., 20 காலை ஏழு மணி வரை திறந்திருக்கும். 14-ல் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. 18-ம் தேதி 11.30 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். 19-ம் தேதி நெய்யபிஷேகம் இல்லா விட்டாலும் பக்தர்களுக்க அன்று இரவு பத்து மணி வரை தரிசனம் நடத்தலாம். 20-ம் தேதி காலையில் பந்தளம் மன்னர் பிரதிநிதியை தவிர வேறு எவருக்கும் தரிசன அனுமதி கிடையது.