உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கோபுர கலசங்கள் மாயமாகும்...மர்மம்! பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

கோவில் கோபுர கலசங்கள் மாயமாகும்...மர்மம்! பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களின் கோபுர கலசங்கள், மர்மமான முறையில் மாயமாகி வருகின்றன. காஞ்சிபுரம் நகர பகுதியில், பிரசித்தி பெற்ற, காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், கைலாச நாதர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள், இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

கலசம் எங்கே?: காமாட்சி அம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தின் மேலே இருந்த, செப்பு கலசம் ஒன்று, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாயமானது. இதேபோல், வரதராஜ பெருமாள் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள, ராஜகோபுரத்தில், இரண்டு செப்புக் கலசங்கள் கடந்த 4ம் தேதி மாயமாகின. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்துள்ளனர். ஆனால், காமாட்சி அம்மன் கோவிலில், மாயமான கலசம் குறித்து புகார் அளிக்கப்படவில்லை.

மாற்று ஏற்பாடு?:
இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், கோவிலின் மணி முடி எனப்படும், கோபுரகலசம் மாயமான பின்னரும், மாற்று ஏற்பாடு அல்லது பரிகார பூஜைகள் செய்யப்படவில்லை. இதனால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் என, பக்தர்கள் நம்புகின்றனர் என்றனர். மேலும், இதனை உறுதிப் படுத்துவதைப்போல், கடந்த 19ம் தேதி இரவு, வரதராஜ பெருமாள் கோவிலின் தெற்கு மாட வீதி மதில் சுவரின் ஒரு பகுதி, திடீரென சரிந்தது என்றனர்.இது குறித்து, அறநிலையதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காமாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் மாயமானதாக கூறப்படும் கலசம், பழுது ஏற்பட்டு உள்ளே இறங்கி உள்ளது. வரதராஜ பெருமாள் கோவிலில் மாயமான கலசம் குறித்து, கோபுரத்தின் மீது ஏறி, போலீசார் மற்றும் அதிகாரிகள், ஆய்வு செய்தனர். விரைவில், கலசங் களுக்கான மாற்று ஏற்பாடு குறித்து, நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார். வரலாற்று சிறப்பு மிக்க காஞ்சிபுரம் கோவில்களுக்கு பாது காப்பை அதிகரிக்க வேண்டும் என, பக்தர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !