உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று அனுமன் ஜெயந்தி: தன்னலமற்ற சேவை செய்வோம்!

இன்று அனுமன் ஜெயந்தி: தன்னலமற்ற சேவை செய்வோம்!

கணவர் பாசமாக இருந்தாலும் மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமையால் குடும்பத்தை விட்டு பிரிந்து சிரமப்படும் பெண்கள் நிறையவே இருக்கிறார்கள். இவர்களை "அபலை என்பர். "அபலை என்றால் "பலமில்லதாவள். சீதையை விட்டுப் பிரிந்து ராமன் பட்ட கஷ்டம் ஒருமடங்கு என்றால், சீதை அசோகவனத்தில் பட்ட கஷ்டம் கோடி மடங்கு. நாகரிகமே இல்லாத ராக்ஷசப் பெண்கள் சூழ்ந்திருக்க, காமுகனான ராவணனிடம் சிக்கி அபலையாக அவஸ்தைப்பட்டாள். தன் நிலையை எண்ணி, அங்கிருந்த அசோகமரத்திலேயே சுருக்குப் போட்டு உயிர் விட எண்ணினாள். அந்த தருணத்தில் வந்து சேர்ந்தார் அண்ணல் ஆஞ்சநேயர். பட்டுப்போக இருந்த பயிர், மழை கொட்டினால், எப்படி தளிர்க்குமோ அதுபோல் இருந்தது அவரது இலங்கை வரவு. லோகமாதாவான திருமகளின் துன்பத்தையே போக்கி நம்பிக்கை தந்ததால் தான் அவரை "பெண்களின் சாமி என்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் அனுமனைத் துதித்தால் மனவருத்தம் தீரும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கணவருடன் ஒற்றுமையாக வாழும் நன்மை கைகூடும். கன்னியருக்கு ஸ்ரீராமனைப் போன்ற கணவரும் அமைவார்.

உலகத்தில், கல்வி, விளையாட்டு இன்னும் பிறவற்றிற்காக "அவார்டு பெறுபவர்கள் நிறைய உண்டு. ஆனால், தன்னமலற்ற சேவைக்காக கடவுளிடமே பரிசு பெற்றவர் அனுமன். ""இலங்கையிலிருந்து, நான் தப்பி வந்ததற்கு முழுமுதல் காரணம் அனுமனே, என நன்றியுணர்வோடு ராமபிரானிடம் சொன்னாள் சீதை. ராமபிரானும் அதை ஆமோதித்து,"" நாம் இருவரும் அனுமனுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன்பட்டிருக்கிறோம், என்றார். பட்டாபிஷேக ஞாபகார்த்தமாக எல்லாருக்கும் பரிசு வழங்கினார் ராமன். தான் அணிந்திருந்த முத்துமாலையை சீதையின் கையில் கொடுத்துவிட்டு, மவுனமாக இருந்தார். சீதையும் ராமனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாய், ""பிரபு! முத்தாரத்தை உங்கள் பரிவாரத்தில் இருக்கும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தாங்களே சொல்லி விடுங்களேன்! என்று வேண்டுகோள் விடுத்தாள். அப்போது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, ""பராக்கிரமம்,புத்தி, பணிவு யாருக்குப் பூரணமாக இருக்கிறதோ, அவருக்கு கொடு! என்றார். உடனே, சீதாதேவி அந்த முத்தாரத்தை அனுமனிடம் கொடுத்தாள். அனுமனுக்கு கிடைத்த இந்த "அவார்டு அவரே ராமாயணத்தின் அச்சாணி என்பதை உறுதிப்படுத்துகிறது. அனுமனின் பிறந்த நாள் மட்டுமல்ல, இன்று புத்தாண்டும் கூட! இந்த நன்னாளில், பிறருக்கு தன்னமலற்ற சேவை செய்ய உறுதியெடுப்போம்.

இது பெண்களுக்கான செய்தி: இஸ்லாம் ஒழுக்கத்தை பேணுவதில் மிகவும் அக்கறை காட்டுகிறது. குறிப்பாக, தங்கள் கணவனைத்தவிர, மற்றவர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென பெண்களுக்கு அறிவுரை சொல்கிறது. ஒருமுறை நபிகள் பெருமானாரைச் சந்திக்க பார்வை தெரியாத ஒருவர் வந்தார். அவரது பெயர் உம்மி மக்தூம். அப்போது நாயகம் அவர்கள், தனது துணைவியார் ஆயிஷா அம்மையாருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். பார்வை தெரியாதவர் வீட்டிற்குள் வந்ததும், தனது மனைவியை உள்ளே போகச் சொன்னார்கள். ஆயிஷா அம்மையாருக்கு எதுவும் புரியவில்லை. பிற ஆண்கள் வந்தால், பெண்கள் வீட்டிற்குள் எழுந்து சென்றுவிடுவது அரபு நாட்டில் வழக்கம். ஆனால், பார்வையற்ற ஒருவர் தங்கள் வீட்டிற்குள் வந்தபோதும், எதற்காக தன்னை நாயகம் உள்ளே போகச்சொன்னார்கள் என்பது அம்மையாருக்கு புரியவில்லை.நாயகமும், அந்த நண்பரும் நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தனர். பின், அவர் விடைபெற்றுச்சென்றார். அதன்பிறகு ஆயிஷா அம்மையார், ""அண்ணலாரே! வந்தவருக்குத்தான் பார்வை கிடையாதே, அப்படி இருக்கும்போது என்னை ஏன் உள்ளே போகச்சொன்னீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நாயகம் அவர்கள், ""அவரால் எதையும் பார்க்க இயலாது என்பது உண்மைதான். ஆனால், உம்மால் அவரைப்பார்க்க முடியுமே! அதனால்தான் உம்மை உள்ளே போகும்படி சொன்னேன், என்றார்கள்.பார்த்தீர்களா! பெண்களுக்கு எந்த அளவு ஒழுக்கம் வேண்டுமென்பதை!

புத்தாண்டு உறுதிமொழி எடுங்க!: சர்ச்சுக்கு போகிறீர்கள். போதகர் பிரசங்கம் செய்கிறார். சிலர் அதைக் கவனித்துக் கேட்பதில்லை. எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தூங்கி வழிகிறார்கள். சிலருக்கு பிரசங்கம் போரடிக்கிறது. ஆனால், ஒரு சிலரோ அதை பரவசத்துடன் கேட்கிறார்கள், ஊன்றிக் கவனிக்கிறார்கள். அவர்கள் மனதில் கர்த்தரின் தியாக வாழ்வு பதிகிறது. அது உள்ளத்தை குளிரச் செய்கிறது. ஆண்டவரின் சன்னிதானத்துக்கு சென்றால் அவரிடம், ""கர்த்தரே! என்னோடு கூட பேசும். உம்முடைய ஞானமான ஆலோசனைகளை எனக்குத்தாரும். உம்மை எண்ணும் என் இருதயம் குளிர வகை செய்யும், என்று முழுமனதோடு, அவரோடு ஒன்றி ஜெபியுங்கள். அவரிடம் உங்கள் பாரங்களை இறக்கி வையுங்கள். கர்த்தர் நம்மை அவரோடு அணைத்துக் கொள்வார்.சர்ச்சுக்கு சென்று திருப்பலி நடக்கும் போது, வெளியே வந்து நின்று கதை பேசி கொண்டிராதீர்கள். ஆண்டவரின் அற்புதங்களைக் கேட்டு பரவசமடையுங்கள். இனி சர்ச்சுக்குப் போனால், வெளி விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டேன் என்று உறுதியெடுங்கள். ஆம்...இது இந்த புத்தாண்டின் உறுதிமொழியாக இருக்கட்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !