உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி துவக்கம்!

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி துவக்கம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் இன்று கோலாகலமாக துவங்கியது. தமிழகத்தில் உள்ள, 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலக பிரசித்திப்பெற்றது. பூலோக வைகுண்டம், 108  வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம், 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து முதல் திருநாள் இன்று துவங்குகிறது. முன்னதாக, நேற்று இரவு உற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியாக ரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகம் பகுதி பாடப்பட்டது. இன்று துவங்கும் பகல் பத்து, ஜனவரி, 10ம் தேதி வரை நடக்கிறது. பகல் பத்து எனப்படும் திருமொழித்திருநாள் நடக்கும் நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் அதிகாலை புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தானமிருப்பார். அப்போது அரையர்கள் நம்பெருமாள் முன்னர் ஆழ்வார்களின் திருமொழிப்பாசுரங்களை அபிநயத்தோடு பாடிக்காட்டுவர். அரையர்களின் இசையைக்கேட்டவாறு மாலை வரை பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கும் நம்பெருமாளை, 6.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு உபயங்கள் கண்டருளியவாறு இரவு, 9.30 மணிக்கு மூலஸ்தானம் சேருவார். பகல்பத்தின் நிறைவுநாளான, 10ம் தேதி மோகனி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் ஸேவை சாதிப்பார்.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்கவாசல்), ஜனவரி, 11ம் தேதி அதிகாலை திறக்கப்படும். அன்று அதிகாலை நம்பெருமாள் பாண்டியன்கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அணிந்து, மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்படுவார். அதிகாலை, 4.30 மணிக்கு பக்தர்களுடன் பரமபதவாசல் கடப்பார். ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, இரவு வரை பக்தர்களுக்கு ஸேவை சாதிப்பார். அப்போது அரையர்கள் திவ்யபிரபந்தத்தின் திருவாய் மொழிப்பாசுரங்களை இசைப்பர். பரமபதவாசல் திறப்பு நாளிலிருந்து அடுத்த பத்து நாட்கள் நடக்கும் விழா, ராப்பத்து விழா என்றும், திருவாய்மொழித்திருநாள் என்ற பெயிரிலும் அழைக்கப்படும். ஏகாதசி முன்னிட்டு இன்று மூலவர் ரங்கநாதர் முற்றிலும் நல்முத்துக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட முத்தங்கியில் காட்சியளிப்பார். ஜனவரி, 20ம் தேதி வரை முத்தங்கி ஸேவையில் பெரிய பெருமாள் காட்சியளிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !