சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம்!
நாகர்கோவில்: ஆஞ்சநேயர் ஜெயந்தி தினத்தையொட்டி சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இங்கு 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது. எல்லா மார்கழி மாதமும் மூலம் நட்சத்திர நாளில் ஜெயந்தி விழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இந்த விழா நடைபெற்றது. காலை ஐந்து மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சைசாறு, கரும்பு சாறு, மஞ்சள், குங்குமம், சந்தனம், களம், விபூதி, மாதுளைசாறு என 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது, மாலையில் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் இடைவிடாது அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.