திருச்செந்தூர் முருகன் கோயில் அதிகாலை நடை திறப்பு!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை நடை திறப்பை கண்டித்து, இந்து முன்னணியினர் கோயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசாரின் சமரசத்தால், கலைந்து சென்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று, வழக்கமாக கோயில் நடை அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்தாண்டு, இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலப் புத்தாண்டு இந்துக்கள் பண்டிகை இல்லை. கோயில் ஆகம விதிகளின் படி காலை 5:00 மணிக்கு தான் நடை திறக்க வேண்டும், என மதுரை ஐகோர்ட் கிளையில், சாத்தான்குளம் சுந்தரவேல் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் பிரகாஷ், மகாதேவன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்தது. இந்நிலையில், கோயில் நிர்வாகம் தரப்பில் திட்டமிட்டபடி, நேற்று அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு நேற்று முன் தினம் இரவே வரத் துவங்கினர். கடற்கரையில் பக்தர்கள் பெருமளவு திரண்டனர். முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக, தெற்கு மாவட்டத்தலைவர் முருகேசன், மாநிலத்தலைவர் அரசுராஜா, உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கே திரண்டிருந்தனர். அவர்கள் கோயில் நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் சமரசம் செய்தனர். பின்னர், இரவு 12.40 க்கு அவர்கள் கலைந்து சென்றனர். திட்டமிட்டபடி, அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1:30 க்கு விஸ்வரூப தரிசனம், 2:00 மணிக்கு உதவ மார்த்தாண்ட அபிஷேகம், 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.