ராமநாதபுரம் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை, பிரார்த்தனை!
ராமநாதபுரம்: ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ராமநாதபுரம் அன்னை ஜெபமாலை சர்ச்சில், பங்கு தந்தை ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. கோவை கபுச்சின் சபை பங்கு தந்தை மரியதாஸ் புத்தாண்டு செய்தி வழங்கினார். உதவி பங்கு தந்தை சேவியர் ஆரோக்கியசாமி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். சி.எஸ்.ஐ., சர்ச்சில் சபை குரு அமிர்தநாயகம் ஆசி வழங்கினர். பாரதி நகர் ஏ.ஜி.சபை, சவேரியார் சர்ச்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பரமக்குடி: பரமக்குடி அலங்காரமாதா அன்னை சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. ஒக்கூர் கப்புச்சின் சபை பங்குத்தந்தை மரியஅந்தோணி தலைமை வகித்தார். பரமக்குடி பங்குத்தந்தை பிரபாகரன் வரவேற்றார். துணை பங்குத்தந்தை பாசில் முன்னிலை வகித்தார். நம்பிக்கையின் தீபங்களாக ஒளிரவும், உலக மக்களுக்காகவும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. பங்கு இளைஞர் மன்றத்தின், பங்கு பேரவையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பரமக்குடியில் அனைத்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் வேர்க்கோடு புனித சூசையப்பயர் சர்ச்சில் பாதிரியார் சகாயராஜ், தங்கச்சிமடத்தில் புனித அற்புத குழந்தை ஏசு சர்ச்சில் பாதிரியார் ஜேம்ஸ் அந்துவான்தாஸ், புனித வளனார் சர்ச்சில் உதவி பாதிரியார் அமல்ராஜ், பாம்பன் மாதா சர்ச்சில் பாதிரியார் சேசுராஜ், ராமேஸ்வரம் சி.எஸ்.ஐ., சர்ச்சில் சாம்சன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் பழைய போலீஸ் லைனில் உள்ள வால் அறுந்த அனுமான் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், ஆஞ்சநேயர், தொண்டி சிவன், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கீழக்கரை: கீழக்கரை வடக்கு தெரு சி.எஸ்.ஐ., பரிசுத்த தாமஸ்சர்ச்சில் சபைகுரு தேவதாஸ் ராஜன் பாபு தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. சபை பொருளாளர் பெஞ்சமின் வசீந்திரன், டேவிட் மோசஸ், பாலையா பங்கேற்றனர். திருவிருந்து பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். கீழக்கரை திரு இருதய, அந்தோணியார் சர்ச்களில், சிறப்பு திருப்பலி நடந்தது. முத்துப்பேட்டை காணிக்கை அன்னை சர்ச்சில் அருட்சகோதரர் செபஸ்தியான் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில், திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் பெருமாள் சுவாமி கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் களை கட்டியது. சிறப்பு பூஜைகள் நடந்தது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில், தலைமை குருக்கள் மோகன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.