உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்

பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்

திருப்புத்தூர்: புத்தாண்டை முன்னிட்டு,நேற்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். சுவாமி பள்ளி எழுச்சிக்குப் பின்னர் பக்தர்கள் கற்பக விநாயகரை தரிசிக்கத் துவங்கினர். காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கக் கவசத்தில் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் சன்னதி அருகே, வெள்ளி மூஷிகவாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். காலை முதல் கோயில் குளக்கரையைச் சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் காணப்பட்டனர். கோயிலின் அருகே நிழற்கூடாரத்தில் ஐந்து வரிசைகளில் பக்தர்கள் கோயிலினுள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் கோயில் ரோட்டில் அனுமதிக்கப்படாமல், வேறு இடங்களில் நிறுத்தப்பட்டதால், நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். முந்தைய புத்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாகக் காணப்பட்டது.எஸ்.பி.,அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிவகங்கை கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிவகங்கை, விஸ்வநாதசுவாமி கோயிலில், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.சுந்தரராஜ பெருமாள் கோயிலில், நேற்று காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் காட்சி அளித்தார். சீனிவாச அய்யங்கார் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்தனர். கவுரி விநாயகர் கோயிலில், சர்வ அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளித்தார். பக்தர்கள் அதிகாலை முதலே புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !