பெரியகோவில், அம்மன் கோவிலில் புத்தாண்டு தினத்தில் சிறப்பு பூஜை
தஞ்சாவூர்: புத்தாண்டு தினத்தையொட்டி பெரியகோவில் மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை பெரியகோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக வழக்கமாக காலை, 6 மணிக்கு திறக்கப்படும். மதியம், 12.30 மணிக்கு சாத்தப்படும். தொடர்ந்து, 4 மணிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, இரவு, 8.30 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பெரியகோவிலில் பொதுவாக, மார்கழி மாதத்தையொட்டி, 30 நாட்களும் சிறப்பு பூஜை நடத்தப்படும். அதன்படி மார்கழி மாதம் துவங்கியது முதல், காலை ஒரு மணி நேரம் முன்னதாக, 5 மணிக்கே கோவில் திறக்கப்பட்டு வருகிறது. பின்னர் காலை, 5.30 மணிக்கு மார்கழி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மூலவரான பிரகதீஸ்வரருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதன்படி, நேற்றும் பூஜைகள் நடந்தன. புத்தாண்டு தினமான நேற்று காலை, 7.30 மணிக்கு பெரியகோவிலில் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வெளியூர் பயணிகள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இதேபோல தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் அனுமன் ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டையொட்டி தஞ்சை மேலவீதியிலுள்ள மூலை அனுமார்கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் மூல நட்சத்திரத்தில் பிறந்த பக்தர்கள், ராசி, நட்சத்திரம் லக்னத்துக்கு பரிகாரம் செய்து, அனுமார் ஸ்வாமியை வழிபட்டனர். அருகிலுள்ள வீரஆஞ்சநேயர் ஸ்வாமி கோவிலிலும், சொர்க்கவாசல் அதிகாலை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தேங்காய் துருவல் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.