பகவதியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கி வழிபாடு
ப.வேலூர்: ஆனங்கூர் பகவதியம்மன் கோவில் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ப.வேலூர் அடுத்த, ஆனங்கூரில் பகவதியம்மன் கோவில் திருவிழா கடந்த, 28ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. 30ம் தேதி இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம், 1 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற, ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அங்கு, கரகத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஊர்வலமாக வந்த பக்தர்கள், மாலை, 5.30 மணிக்கு, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டல் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று காலை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாலை, 6 மணிக்கு மாவிளக்கு எடுத்தும், அம்மனுக்கு பூஜை செய்தனர். இரவு, 9 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஜன., 2) மாலை, 3 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.