பழநிதைப்பூச நிறைவு விழா தெப்ப உற்சவத்தில் சிக்கல்
பழநி :பழநி தைப்பூச நிறைவு விழா அன்று நடக்கும், பெரியநாயகியம்மன் கோயில், தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழநி தைப்பூச விழா, ஜன.,11 ல் கொடியேற்றத்துடன் துவங்கி, ஜன., 20 வரை நடக்கிறது. விழா நிறைவு நாளான 10 ம்நாள், பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில், தெப்ப உற்சவ விழா நடக்கும். அன்று, மாலை 7 மணிக்கு மேல், முத்துகுமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில், தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வாணவேடிக்கைகள் நடைபெறும்.இந்த ஆண்டு போதிய மழையில்லாததால், தெப்ப உற்சவம் நடைபெறும், தெப்பக்குளத்தில், தண்ணீர் இல்லாமல், செடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. விழாவிற்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் இதுவரை, தண்ணீர் நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நிறைவு விழாவான தெப்ப உற்சவம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள குளத்தை, தனியார் மடத்தினர் பராமரித்து வருகின்றனர். தெப்ப உற்சவ ஏற்பாடுகளை ஆண்டுதோறும் அவர்கள் தான் செய்கின்றனர். கடந்தாண்டு மூன்று படிகள் வரை தண்ணீர் இருந்தது. அருகேயுள்ள கிணறுகள், ஆற்றிலிருந்து, மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பி, தெப்ப உற்சவம் நடந்தது. தற்போது, கோயில் கிணறு, ஆற்றில் தண்ணீர் இல்லாததால், குளத்தில் தண்ணீர் நிரப்ப வாய்ப்பு இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன் இதே நிலை வந்தபோது, சுவாமியை, குளத்துகரையிலுள்ள விநாயகர் கோயில் அருகே வைத்து, அபிஷேகம் செய்து விழா நடந்தது, என்றார்.