சவுரிக்கொண்டையில் நம்பெருமாள் ஸேவை
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்காநதர் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவில், பகல்பத்து, இரண்டாம் நாளான நேற்று, நம்பெருமாள் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார்.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், டிசம்பர், 31ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல்பத்து திருவிழாவின், இரண்டாம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரிக்கொண்டை அலங்காரத்தில், கஸ்தூரி திலகம், வைர அபயஹஸ்தம், தங்க அடுக்கு பதக்க மாலை, தங்க காசுமாலை உள்ளிட்ட திரு ஆபரணங்களை அணிந்து, காலை, 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து, ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் புறப்பட்டு, அர்ச்சுண மண்டபத்தை அடைந்தார்.பின், 7.30 - 8 மணி வரை, திரையிடப்பட்டது. 8 மணி முதல் மதியம், 1 மணி வரை, அரையர் ஸேவையுடன், பொதுஜன ஸேவை நடந்தது. மதியம், 1 - 2 மணி வரை, அலங்காரம், அமுது செய்ய திரையிடப்பட்டது. மதியம், 2 - 3 மணி வரை, திருப்பாவாடை கோஷ்டி வைபவம் நடந்தது.பிற்பகல், 3 - 4 மணி வரை, வெள்ளி சம்பாவில் அமுது செய்ய திரையிடப்பட்டது. மாலை, 4 - 5.30 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன ஸேவை நடந்தது. 5.30 - 6.15 மணி வரை புறப்பாட்டுக்கு திரையிடப்பட்டது. 6.15 மணிக்கு அர்ச்சுண மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் இரவு, 9.30 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார்.