பாரியூர் குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் குண்டம் திருவிழா குறித்து, கோபி சப் கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடடந்தது. கோவில் நிர்வாகம் தரப்பில், "குண்டம் திருவிழாவின் போது, 30 ஆயிரம் முதல், 40 ஆயிரம் பக்தர்கள் வரை கோவிலுக்கு வருவர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றனர். சுகாதார துறை சார்பில், "கோவில் பகுதியில் மூன்று தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்படும். சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். சப் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, ""கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால், ஆறு தற்காலிக கழிப்பிடம் அமைக்க வேண்டும். போதிய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும், என்றார். கோவில் செயல் அலுவலர் மாலா, போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர். * இந்நிலையில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலையில், அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது. திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். வரும், 9ம் தேதி அதிகாலை, குண்டமும், 10ம் தேதி மாலை, தேர்த்திருவிழாவும், 11ம் தேதி இரவு மலர் பல்லக்கும் நடக்கிறது.