ஆல்கொண்டமால் கோவில் திருவிழா நால்ரோட்டில் பேனருக்கு தடை வருமா?
உடுமலை: உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கலையொட்டி கோவிலில் நடக்கும் திருவிழாவில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். பக்தர்கள் காளைமாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வருவதால், பொள்ளாச்சி- தாராபுரம் மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை ரோட்டில் நெரிசல் அதிகளவு இருக்கும். இரண்டு ரோடுகளும் சந்திக்கும் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட முடியாத அளவிற்கு இருக்கும். இந்நிலையில், கோவில் திருவிழாவிற்கு வருபவர்களை வரவேற்பதாக பல அமைப்புகள், கட்சிகள் சார்பில் பிரமாண்ட "பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக நடக்கிறது. நால்ரோட்டின் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்படும் "பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகிறது. பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் நால்ரோட்டில் திரும்ப இந்த பேனர்கள் இடையூறாக உள்ளது.எனவே இந்தாண்டு பொங்கல் திருவிழாவையொட்டி நால்ரோட்டில் பேனர்கள் வைக்க தடைவிதிக்க வேண்டும்;பல மாதங்களுக்கு முன் வைக்கப்பட்டு தற்போதும் அகற்றப்படாமல் உள்ள பேனர்களை குடிமங்கலம் போலீசார் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.