பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு இருளில் ஒளிரும் குச்சிகள்!
பழநி: தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின், பாதுகாப்பான பயணத்திற்காக, இருளில் ஒளிரும் குச்சிகளை போலீசார் வழங்கி வருகின்றனர். பழநி தைப்பூச விழாவிற்காக மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இரவு நேரத்தில் ரோட்டோரங்களில் நடந்து செல்லும் போது, வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்துக்கள் நடக்கிறது. விபத்துகளை தடுப்பதற்காக, இரவு 10 மணிக்கு மேல் நடப்பதை தவிர்க்கவேண்டும், என வலியுறுத்தி, பழநி-- திண்டுக்கல் ரோட்டில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மஞ்சள், சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட, 10,000 ஒளிரும் குச்சிகளை பழநி- திண்டுக்கல் ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு போலீசார் வழங்கி வருகின்றனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறுகையில், இரவு நேரத்தில் தான் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதனை தவிர்க்கும் வகையில், பாதயாத்திரை பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் குச்சிகளை, மூலச்சத்திரம், ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி வரை வழங்கிவருகிறோம். பக்தர்கள் நள்ளிரவில் நடப்பதை தவிர்க்க வேண்டும், என்றார்.