ஜன. 14-ம் தேதி மகர சங்கரம பூஜை: மகரவிளக்கு ஏற்பாடுகள் தீவிரம்!
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக சுத்திகிரியைகள் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. 14-ம் தேதி பகல் 1.14 மணிக்கு மகர சங்கரம பூஜை நடக்கிறது. சபரிமலையில் மகரவிளக்கு விழாவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் முதலியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மகரவிளக்குக்கு முன்னோடியான சுத்திகிரியைகள், வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6.30- மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் பிரசாத சுத்திகிரியைகள் நடக்கும். 13-ம் தேதி உச்சபூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி கிரியைகள் நடைபெறுகிறது. இந்த பூஜைக்கு பின் அபிஷேகம் செய்யப்படும். மகரவிளக்கு நாளில் சபரிமலையில் நடை பெறும் முக்கிய பூஜை மகர சங்கரம பூஜை. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் இந்த பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு, ஐயப்பன் சிலையில் அபிஷேகம் செய்யப்பட்டு தேங்காய் மூடியில் நெய் பிரசாதமாக வழங்கப்படும். இந்த ஆண்டு 14-ம் தேதி பகல் 1.14 மணிக்கு இந்த பூஜை நடைபெறுகிறது. 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரணம் 14-ம் தேதி மாலை 6.25 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். இந்த திருவாபரணங்களை ஐயப்பன் சிலையில் அணிவித்து தீபாராதனை நடைபெறும். இது முடிந்ததும் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் வானில் பிரகாசிக்கும். அதை தொடர்ந்து மூன்று முறை ஜோதி காட்சி தரும்.