திருச்செந்தூரில் தைப்பொங்கல், தைப்பூசமத்திற்காக குவியும் பக்தர்கள்
ஜனவரி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கலை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது.புதன்கிழமை காணும் பொங்கலை முன்னிட்டு, கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை மற்றும் தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி கணு வேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜனவரி 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்குச் சென்று அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேருகிறார். கூடுதல் பணியில் காவலர்களை நியமிக்க கோரிக்கை: தை மாதப் பிறப்பான பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, திருச்செந்தூருக்கு கடந்த சில நாள்களாகவே பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.இந்த ஆண்டு பொங்கலை அடுத்த 3-ஆவது நாளே தைப்பூசம் என்பதாலும், தொடர்ச்சியாக விடுமுறை நாள்கள் என்பதாலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.