ஆனைமலை பகுதியில் பொங்கிய பொங்கல் விழா!
ஆனைமலை: ஆனைமலை பகுதியில் கிராமிய மணம் மாறாத கிராமங்கள் நிறைந்துள்ளதால், வெளியூர்களில் வசிப்பவர்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆனைமலை ஒன்றிய கிராமங்களுக்கு வரத்துவங்கியுள்ளனர். இதனால், ஆனைமலை கிராமங்கள் களை கட்டியுள்ளது. ஆனைமலை பகுதியில், தை திருநாளில் உழவு தொழில் நடக்க முதல் காரணமாக விளங்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் முதல் பொங்கல் சூரியனுக்கு வைத்து வழிபட்டனர். இரண்டாம் நாளான நேற்று உழவனின் உற்ற நண்பனான மாடுகளுக்கு விவசாய தோட்டங்களில் மாட்டுப்பொங்கல் வைத்து கால்நடைகளையும், விவசாய நிலத்தையும் வழிபட்டனர். சேத்துமடை, காளியாபுரம், வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாட்டுப்பொங்கலை கோலாகலமாக கொண்டாடினர். மாலை 4:00 மணியில் இருந்தே தோட்டங்களில், உறவினர்கள், நண்பர்கள் கூட்டம் திரண்டது. நள்ளிரவு 12.00 மணி வரையிலும் ஒவ்வொரு தோட்டத்திலும் பொங்கல் விழா நடந்தது. கால்நடைகளுக்காக படைத்த பொங்கலை அவற்றிற்கு ட்டும் போது பெண்கள் குலவை சத்ததுடன் "வாய் கழுவு பட்டியாரே,வாய் கழுவு; சோறு தின்னு பட்டியாரே சோறு தின்னு என கால்நடைகளை தங்கள் குழந்தையை போல சீராட்டும் காட்சி காண்போர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. தெப்பக்குளம் அமைத்து வழிபாட்டிற்கு பிறகு மாடுவிரட்டு நடத்தினர். தை மூன்றாம் நாள் பூப்பறிக்கும் நோன்பை கொண்டாடும் வகையில் உறவினர்களுடன் ஆற்றங்கரையில் ஒன்றுகூடி வீட்டிலிருந்து கொண்டு சென்ற திண்பண்டங்களை சுவைத்து பூப்பொங்கல் கொண்டாடுகின்றனர். சில கிராமங்களில் அன்று உருமி ஆட்டம், ஒயிலாட்டம் நடைபெறும். பெருமாள் சாமி கரடு என அழைக்கப்படும் சேனைகல்ராயன் கோவில், மாட்டே கவுண்டன் கோவில், சித்தாண்டி ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது விவசாயிகள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.