திருவிடைமருதூரில் தைப்பூச தேரோட்டம்
கும்பகோணம்: திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிகோவில் தைப்பூச பெருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று வடம் பிடித்து இழுத்தனர். இன்று மதியம் காவிரியில் தைப்பூச தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் பழம்பெருமை வாய்ந்த தலமாக மகாலிங்கசுவாமிகோவில் உள்ளது. இது திருவாவடுதுறை ஆதீனக்கோவில்களுள் ஒன்றாக உள்ளது. இத்தலத்திற்கு சண்பகராண்யம், இடைமருது என 12 பெயர்கள் உள்ளது. ஏழு பெரிய பிரகாரங்களைக்கொண்ட இக்கோவிலைச் சுற்றி நான்கு பெரிய தேரோடும் வீதிகளின் கோடிகளில் விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளது. கீழவீதியில் விசுவநாதர்கோவில், தெற்கே ஆன்மநாதர் ஆலயம், மேற்கே ரிஷிபுரீசுவரர் கோவில், வடக்கே சொக்கநாதர் கோவில் என நாற்புறமும் சிவாலயங்கள் விளங்க நடுவில் மகாலிங்கபெருமான் அமைந்துள்ளதால் இது பஞ்சலிங்க தலம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு அம்பாள் பெருநலமாமுலையம்மை சுதந்திர சக்தியாகவும், கல்யாண கோலத்திலும் காட்சியளிக்கிறார். தனிக்கொடிமரம், தனி நந்தி, தனி கிணறு, தனி மடப்பள்ளி, தனி யாகசாலை என அம்பாள் கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.அம்பாளின் கண்ணில் இருந்து உருவானது தான் காருண்யாமிருத தீர்த்தம் ஆகும். இத்தலத்தில் தனியே மூகாம்பிகை சன்னதியும் உள்ளது. மூகாசுரனை சம்ஹாரம் பண்ணியதால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்குவதற்கு மூகாம்பிகை இங்கு மகாலிங்கபெருமானை வழிபட்டார். வாசம், திருசூலம், அபயத்துடன் அனுக்கிரக மூர்த்தியாக தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு சித்த பிரம்மை பிடித்தவர்கள், மூளைக்கோளாறு உள்ளவர்கள் வந்து வழிபட்டு நலம் பெறுவதாக கூறப்படுகிறது.இத்தலத்தில் சந்திரனின் மனைவி சாபநிவர்த்திக்காக, 27 பேரும் இங்கு வந்து பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். இதனால் இங்கு, 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி லிங்கங்களுடன் காட்சியளிக்கிறது. இங்கு சந்திரன் மட்டும் உயர்ந்து காணப்படும்.இத்தலத்தில், 32 தீர்த்தங்கள் உள்ளன. காருணியாமிருத தீர்த்தத்தில் நீராடுவோர் கங்கையில் நீராடிய பயனைக்காட்டிலும் மேலான பயன்பெறுவர் என்பதும், காவிரியின் கலியாண தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடுவோர் சகல பாவங்களினின்றும் விடுபடுவதாக ஐதீகம்.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச புனித நீராடல் விழா மிகவும் விமரிசையாக நடைபெறும், 10 நாட்கள் விழாவாகும். கடந்த மாதம், 30ம் தேதி அதிகாலை, 5.30 மணிக்கு விநாயகர் கொடியேற்றமும், அன்று மாலை விநாயகர் வீதியுலா வைபவமும் நடந்தது.கடந்த, 7ம் தேதி காலை அஸ்திர யாகம் நான்காம் காலம் பூர்த்தியுடன் மதியம், 1.50 மணிக்கு மகாலிங்கசுவாமிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினசரி சுவாமி, அம்பாள் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.நேற்று ஜனவரி, 15ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் மகாலிங்கசுவாமி தனித்தனி தேரில் எழுந்தருளினர். காலை முதல் திரளான பக்தர்கள் தேரில் ஏறி சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அப்போது அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, 10.35 மணிக்கு தேர்கள் வடம்பிடித்தல் நடந்தது. தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடங்கி வைத்தார். கோவை பிரசானந்தாசுவாமிகள், எம்.எல்.ஏ., செழியன், திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார் என திரளான முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்தனர்.சுவாமி, அம்பாள் தனித்தனி பெரிய தேர்களிலும், பஞ்சமூர்த்திகள் மூன்று தேர்களிலும் எழுந்தருளி ஐந்து தேர்கள் வடம்பிடித்தனர். பக்தர்கள் மகாலிங்கா, மகாலிங்கா என விண்ணதிர கோஷம் எழுப்பியவாறு வடம்பிடித்து இழுத்தனர்.