உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் உற்சவம்

அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் உற்சவம்

திருவண்ணாமலை: மனிதனின் இல்லற வாழ்வில் ஊடலுக்கு பின், கூடல் தத்துவத்தை விளக்கும் வகையில், அண்ணாமலையார் கோவிலில், நேற்று இரவு, 15ம் தேதி திருவூடல் உற்சவம் சிறப்பாக நடந்தது.கிரிவலப்பாதையில் பிருங்கி மகரிஷி என்ற முனிவர், பராசக்தி அம்மனை வழிபட மறுத்து, சிவனை மட்டும் நினைத்து தவம் இருந்து வந்தார். அவருக்கு காட்சி அளிப்பதற்காக, அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது அவரை தடுத்த பராசக்தி அம்மன், தன்னை வணங்காத பிருங்கி மகரிஷி முனிவருக்கு காட்சி அளிக்க கூடாதென, வேண்டுகோள் விடுத்தார். அதனால், ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டது.அம்மனின் வேண்டுகோளை ஏற்காமல், பிருங்கி மகரிஷிக்கு அண்ணாமலையார் காட்சி தந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானப்படுத்த முயற்சித்தும், சமாதானமாகாத பராசக்தி அம்மன், குமரக்கோவிலில் இரவு தங்கினார். கிரிவலத்தின் போது, அண்ணாமலையார் அணிந்திருந்த நகைகளை, கொள்ளையர்கள் திருடி சென்றனர். நகைகளை பறிகொடுத்த அண்ணாமலையார், பராசக்தி தேவியை சந்தித்து, நடந்தவற்றை கூறினார். தன்னை மதிக்காததால் சென்றதால் தான், நகைகள் பறிபோனதாக, பராசக்தி மீண்டும் கோபமானார்.ஆனால், தன் தவற்றால் தான், அண்ணாமலையாருக்கும், பராசக்திக்கும் ஊடல் ஏற்பட்டதாகவும், அண்ணாமலையார் நகைகளை பறிகொடுக்க நேர்ந்தது எனவும், பிருங்கி மகரிஷி தெரிவித்து, பராசக்தியையும் வணங்கினார். இதனையடுத்து, பராசக்தி சமாதானமடைந்ததாக, தல புராணங்கள் தெரிவிக்கிறது. இந்நிகழ்ச்சியை விளக்கிடும் வகையில், நேற்று, அண்ணாமலையார் கோவிலில், ஸ்வாமியும், பராசக்திக்கும், திருவூடல் உற்சவம் நடந்தது.இதில், திருவண்ணாமலையை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். வழிநெடுகிலும் மண்டகப்படி செலுத்தி, பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !