சிதம்பரம் நடராஜர் கோவிலில் காணும் பொங்கல் மக்கள் குவிந்தனர்!
சிதம்பரம்: காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்து வீர விளையாட்டுகளில் பங்கேற்றனர். சிதம்பரம் பகுதியில் காணும் பொங்கலையொட்டி பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் புத்தாடை அணிந்து கோவில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் நடராஜர் கோவில், தில்லைக்காளியம்மன், அனந்தீஸ்வரன் கோவில், இளமையாக்கினார் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிதம்பரம் சுற்றுப் பகுதி கிராம மக்கள், குடும்பத்துடன் நடராஜர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவில் வெளி பிரகாரம் எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமத்தில் இருந்து வருபவர்கள் மதிய உணவு எடுத்து வந்து கோவிலில் குடும்பத்துடனும், உறவினர்கள், நண்பர்கள் என கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் பெண்களின் பாரம்பரிய விளையாட்டான கும்மியடித்தல், கோ கோ, குச்சிப்புடி, கோலாட்டம். சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தம் போன்றவை, இளைஞர்களுக்கு சிலம்பம் போன்ற தற்காப்பு கலை, கபடி உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.