ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் ரதவீதிகள்: இருமுறை சுத்தம் செய்ய எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வீதிகளில் குவியும் குப்பைகளால், சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க, தினமும் இரு முறை அகற்ற, பக்தர்கள் எதிர்பாக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், தற்போது நீராட்ட உற்சவம் நடந்து வருவதால் , நாள் தோறும் கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாநில அரசும் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ்,பல கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல வசதிகளை செய்து வருகிறது. ஆனால், அரசு பல கோடி நிதி ஒதுக்கினாலும், நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே காணப்படும் குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றம், பக்தர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துவதோடு, ஸ்ரீவி., நகரை பற்றி மரியாதையும் குறைந்து வருகிறது. ஆண்டாள் கோயில் மாடவீதிகளை சுற்றிய வாறுகால்கள், சுத்தம் செய்யப்படாமலும்,ஆங்காங்கே டீ கப்கள் , ஆடிப்பூர மண்டபத்திலே எச்சில் இலைகள் குவிக்கும் இடமாக மாற்றப்படுவது, பக்தர்களை மிகுந்த வருத்தமடைய செய்கிறது. நகராட்சி கூட்டத்தில், ஆளும் கட்சி கவுன்சிலர்கள் கூறிய பிறகும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் குறைந்த பட்சம் ஆண்டாள் கோயில் ரதவீதி, மாடவீதி, கோயில் சன்னதி தெருக்களிலாவது, எச்சில் இலைகள், டீ கப் போன்றவற்றை, பொது இடங்களில் போடுவர்களுக்கு, அபராதம் விதிக்க வேண்டும். இந்த தெருக்களை காலை, மாலை நேரங்களில் சுத்தம் செய்தால், கோயில் சுற்றுபுறம் சுத்தமாக இருப்பதோடு, வெளியூர் பக்தர்களும் நகரை புகழும் நிலை ஏற்படும். இதை செய்ய வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.