உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலை பராமரிக்க நடவடிக்கை... பொதுமக்கள் கோரிக்கை

பெருமாள் கோவிலை பராமரிக்க நடவடிக்கை... பொதுமக்கள் கோரிக்கை

ரிஷிவந்தியம்: திருவரங்கம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவில் பராமரிப்பு செய்யப்படாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இக்கோவிலை முறையாக பராமரித்து, புதுப்பிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரிஷிவந்தியம் ஒன்றியம் பகண்டைகூட்ரோடு அடுத்த திருவரங்கம் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 3,000 ஆண்டுகளுக்கு முன் கிருத யுகத்தில் கருங்கற்கள், சுண்ணாம்புக்கற்கள் கொண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. கல்வெட்டுகளுடன் உள்ள இக்கோவில் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலை விட பழமையானது. பொது மக்களின் வசதிக்கேற்ப கோவில் வளாகத்தினை சுற்றி சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்: தமிழகத்தில் மிக பெரிய அளவிலான நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாதர் சிலை, நெற்களஞ்சியம், பெருமாள் பாதம், அரங்கநாயகி சன்னதி, ராமர் சன்னதி போன்றவை, இக்கோவிலில் உள்ளன. இக்கோவில் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.கோவிலில் சந்திரபுஷ்கரணி தீர்த்தமாக அளிக்கப்படுகிறது. பிரம்மாண்டமான நுழைவு வாயிலுடன், அதிகளவிலான கல்தூண்கள் கோவில் வளாகத்தில் அமைந்ள்ளது. உத்தியோகம், விவாகம், புத்திரபாக்கியம் போன்ற 3 வகையான பரிகாரஸ்தலமாக விளங்கும், இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பராமரிப்பில்லை இக்கோவில் முறையான பராமரிப்பு செய்யப்படாததால், சுற்றுச்சுவர்களிலும், கோவிலின் கோபுரங்களிலும் செடிகள் வளர்ந்துள்ளன. ஒரு சில இடங்களில் கோபுரங்களில் உள்ள சிலைகள் சேதமாகியும், கோவிலில் இடது புற சுவர் சற்று சாய்ந்தும் காணப்படுகிறது. பக்தர்கள் கோவிலில் அமர்ந்து சாப்பிடுவதால் இலைகள், பாட்டில்கள் போன்றவற்றை கோவிலுனுள் ஆங்காங்கே போட்டு விடுகின்றனர். அவைகள் அகற்றப்படாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. தண்ணீர் வெளியேற வழியில்லாததால், அப்பகுதிலேயே தேங்கி நிற்கிறது.

எதிர்பார்ப்பு: பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகவும், பரிகார பூமியாகவும் விளங்கும் இக்கோவிலினுள் குப்பைத்தொட்டிகளை அமைத்து, தண்ணீர் வெளியேற வாய்க்கால் அமைக்க வேண்டும்.இக்கோவிலை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். கோவிலின் சுற்றுச்சுவர் மற்றும் கோபுரங்களில் உள்ள செடிகளை அகற்றி சீரமைக்க, இந்து அறநிலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !