தைப்பூச ஆற்று திருவிழாவில்15 சுவாமிகள் செய்யாற்றில் சங்கமம்
காஞ்சிபுரம்: தைப்பூச ஆற்று திருவிழாவை முன்னிட்டு, பெருநகர் செய்யாற்றில், 15 கோவில் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒவ்வொரு ஆண்டும், காஞ்சிபுரம் அடுத்த, பெருநகர் அருகே உள்ள செய்யாற்றில், 18 கிராம கோவில் சுவாமிகள், தைப்பூச திருநாளில் சங்கமிப்பது வழக்கம். இந்த ஆண்டு, பெருநகர், மானாம்பதி, கீழ்நீர்குன்றம், உக்கல் இளநகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட, 15 கிராம கோவில் சுவாமிகள், வெள்ளிக்கிழமை இரவு, 11:00 மணிக்கு, ஆற்றுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த, பந்தல்களில் எழுந்தருளினர். அதன்பின், நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, சுவாமிகளை ஆற்றுக்குள் வரிசையாக எழுந்தருளி, அதிகாலை, 5:30 மணி வரை, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், கோவில்களுக்கு புறப்பாடு நடந்தது. இந்த விழாவில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.