காஞ்சிபுரம் ராமானுஜர் கோவிலில் அனுஷ்டான குள உற்சவம்!
காஞ்சிபுரம்: செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், அனுஷ்டான குள உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடில், ராமானுஜர் கோவில் உள்ளது. இவ்விடத்தில் வழிதெரியாமல் தவித்த ராமானுஜருக்கு, வரதராஜப்பெருமாள், தாயாருடன், வேடுவன் வேடத்தில் காட்சி அளித்ததாகவும், தாகம் தீர்க்க பெருமாள், அனுஷ்டான குள சாலை கிணறை உருவாக்கியதாகவும், புராணங்கள் கூறுகின்றன. ராமானஜருக்கு வரதராஜ பெருமாள் காட்சி அளித்ததை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி முடிந்த 12ம் நாள், அனுஷ்டான குள உற்சவம் கொண்டாடப்படுகிறது. உற்சவத்தை யோட்டி வரதராஜபெருமாள், உற்சவம் ராமானுஜருடன், காலை 10:30 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டு, செவிலிமேடில் உள்ள ராமானுஜர் கோவிலை சென்றடைந்தார். அங்கு, சாலைகிணறு தீர்த்தத்தில், பெருமாளுக்கும், ராமானுஜருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தீபாரதனைக்கு பிறகு, மாலை 3:00 மணிக்கு, பெருமாள் வேடுவர் வேடத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.