சென்னிமலை முருகன் கோவில் மகாதரிசனம்!
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மகாதரிசனத்தில் வெள்ளி மயில் வாகனத்தில், ஸ்வாமி வலம் நடந்தது. இதில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பின் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது. தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான, மகாதரிசனம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக காலை, 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து, மலர் அபிஷேகம் நடந்தது. பல ஆயிரம் கிலோ மலர்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, எட்டு மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய ஸ்வாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய ஸ்வாமி தரிசனம் செய்தனர். இரவு, ஒன்பது மணிக்கு நாதஸ்வர, தவிலிசை கச்சேரியுடன், நான்கு ராஜா வீதிகளிலும் ஸ்வாமிகள் வலம் வந்து, அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் சென்றடைந்தது. நேற்று, இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தேர் திருவிழா நிறைவுக்கு வந்தது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பசவராஜன், கோவில் தலைமை எழுத்தர் ராஜீ மற்றும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, சென்னிமலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில், 100க்கும் அதிகமான போலீஸார் ஈடுபட்டனர்.