உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 85 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.. சிவன்மலையில் தெப்ப உற்சவம்!

85 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.. சிவன்மலையில் தெப்ப உற்சவம்!

காங்கயம் : சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மீட்கப்பட்டதால், 85 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு தைபூச தேர்த்திருவிழா தெப்ப உற்சவம் குளத்தில் நேற்று நடந்தது. சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைபூச தேர்த்திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. தேரோட்டம் கடந்த 17, 18, 19ம் தேதிகளில் நடந்தது. நேற்று பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடந்தது. இக்கோவிலுக்கு சொந்தமான நந்தவன தோட்டம் மற்றும் தெப்பக்குளம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக, கடந்த 85 ஆண்டுகளாக, உற்சவருக்கு, ரோட்டில் நின்று தீபாராதனை காட்டி, பெயரளவுக்கு தெப்ப உற்சவம் நடந்து வந்தது. இந்நிலையில், பழைய ஆவணங்களை ஆய்வு செய்தபோது, 2.25 ஏக்கர் பரப்பளவில் நந்தவன தோட்டம், தெப்பக்குளம் இருப்பது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட இடத்தை கண்டறிந்த அதிகாரிகள், கடந்தாண்டு, மே 17ம் தேதி அப்பகுதியை மீட்டனர். இந்தாண்டு தைபூச தேர்த்திருவிழா, தெப்ப உற்சவம் பழைய இடத்தில், முறைப்படி கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வாஸ்து சாந்தி, நேற்று காலை 6.30 மணிக்கு தெப்பக்குளத்தில் கணபதி ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியம், நந்தவன தோட்டத்தில் பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமி தெப்பக்குளத்தை சுற்றி வந்து, தெப்ப உற்சவம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"85 ஆண்டுகளுக்கு பிறகு, கோவில் நந்தவன தோட்டத்தில் தெப்ப உற்சவம் நடந்துள்ளது. சிதிலமடைந்துள்ள தெப்பக்குளம், உபயதாரர் நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்டு, அடுத்தாண்டு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !