அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!
ADDED :4275 days ago
அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவிலில் தை அமாவாசை நிகும்பலா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை அடுத்து அய்யாவாடியில் மகாபிரத்தியங்கிராதேவி கோவில் உள்ளது. இந்திரன் தனது சாபம் நீங்க இங்கு நிகும்பலா யாகம் செய்து வழிபட்டுள்ள சிறப்பு பெற்ற தலம்.இத்தலத்தில் நடைபெறும் யாகத்தில் பங்குபெறுவதால் வழக்குகளில் வெற்றி, செய்வினைக்கோளாறுகள் அகலுதல், பிரார்த்தனை நிறைவேறுதல் போன்ற நற்பலன்கள் நடைபெறுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. நேற்று தை அமாவாசை என்பதால் நள்ளிரவு முதல் பக்தர்கள் அய்யாவாடிக்கு வருகை தர ஆரம்பித்தனர். நேற்று காலை நிகும்பலா யாகம் நடந்தது. தை அமாவாசை என்பதால் வழக்கமான அமாவாசை நாட்களை விட இரண்டு மடங்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வருகை தந்திருந்தனர்.