உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் இசை விழா

மதுரையில் இசை விழா

மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜம் 62வது ஆண்டு இசை விழாவை முன்னிட்டு, ஜெ.ஏ.ஜெயந்தின் புல்லாங்குழல் கச்சேரி நடந்தது. இசைப்பரம்பரையில் வந்த ஜெயந்த் தனது குழலிசை கச்சேரியை, ஸ்வாதித் திருநாளின் காம்போதி ராக அடதான வர்ணத்தோடு தொடங்கினார். அவரது நேர்த்தியான வாசிப்பு, திஸ்ர, சதுஸ்ர நடையில் வர்ணத்திற்கு மேலும் வர்ணமூட்டியது. அடுத்ததாக, வசந்தா ராக தமிழ் கீர்த்தனை, கண்டேன் சீதையை, என்று துவங்கிய அருணாச்சல கவிராயரின் பாடலில், இசை வடிவில் ராமனையும் காட்டினார்.  ஆதி தாளத்தில் ஸ்வர பிரஸ்தாரம் அமோகம். ‘காபி’ ராக ஆலாபனையை இன்ஸ்டன்டாக தந்து விட்டு, தியாகராஜர் அருளிய ‘மீ வல்ல குண தோச மேமி’ என்ற கிருதி, கண்டசாபு தாளம், குழல் கருவியில், பாடலையும், கற்பனா  சுரங்களையும் அள்ளி தந்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். இக்கச்சேரியின் முதுகெலும்பாக பக்க வாத்திய கலைஞர்களை சொல்ல வேண்டும். வயலின் வாசித்த நாகை எஸ். ஸ்ரீராம் சிறந்த வித்வத்தை வெளிப்படுத்தினார். மிருதங்கம் வாசித்த மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், கச்சேரியை லயத்தால் அழகுபடுத்தினார். கடம் வாசித்த எஸ்.கார்த்திக், எப்போதும் போல் கச்சேரியை களை கட்ட செய்தார். அடுத்து, ஜெயந்த் சேனா ராகத்தில் தியாகராஜர் கீர்த்தனை விறுவிறுப்புடன் இருந்தது. மிக அரிதான, ‘விடஜாலதுர’ என்ற இந்த பாடலை, குழலில் வடிவமைத்த ஜெயந்தின் குழலிசை பாராட்டுக்குரியது. தொடர்ந்து கரஹரப்ரியா ராக ஆலாபனையை தொடங்கிய ஜெயந்த், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தார். வயலின் ஸ்ரீராம் பாரம்பரிய கரஹரப்ரியாவை வாசித்து நிறைவான ஆலாபனையை தந்தார். ராக ஆலாபனையை அடுத்து, ‘ராமநீஸமானம் வெரு’ என்ற ரூபக தாள கீர்த்தனை, தியாகராஜர் அருளியது. பாவ பூர்வமாக விளங்கிய பாடலை பிரமாதமாக ஜெயந்த் வாசித்து, சரண வரிகளை நிறவல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !