உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொன்மையான சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

தொன்மையான சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

மதுரை: தொன்மையான மரபுச்சின்னங்களை அழிவில் இருந்து பாதுகாக்க, உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்துச்செல்ல வேண்டும், என தானம் அறக்கட்டளையின் மேம்பாட்டிற்கான சுற்றுலா அணி சார்பில் நடந்த பாரம்பரிய நடைபயணக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மதுரை கருங்காலக்குடியில் நடந்த கூட்டத்தில், வரலாற்றுப்பேராசிரியர் வெங்கட்ராமன் பேசியதாவது: சமணர்கள் எளிமையாக ஊருக்கு வெளியே குன்றுகளில் வசித்தனர். தமிழ் மொழி வளர்ச்சிக்கு சமணர்கள் பெரும் தொண்டாற்றினர். சமணர்கள் வாழ்ந்த குன்றுகள் மதுரையைச் சுற்றி நிறைய இருந்ததால், எண் பெருங்குன்றம் என அழைக்கப்பட்டது, என்றார். தொல்லியல் நிபுணர் வேதாச்சலம் பேசியதாவது: 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று ஆதாரங்களை கருங்காலக்குடி கொண்டுள்ளது. பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் கருங்காலக்குடி மலையில், தொல்குடிமக்கள் வாழ்ந்த தடயங்களை இன்றும் காணலாம். காவி நிறத்தில் வரையப்பட்ட காளை உருவங்கள் உள்ளிட்ட பாறை ஓவியங்கள், ஊரின் பழமைக்குச்சான்றாக உள்ளது. கி.மு.2 ம் நூற்றாண்டில் இருந்து சமண முனிவர்களும், அவர்களின் சீடர்களும் கற்படுக்கை அமைத்து, வாழ்ந்தனர்.இழையூரைச் சேர்ந்த ஆரிதன் என்பவர், இதைச் செய்து கொடுத்ததாக, கல்வெட்டு கூறுகிறது. கி.பி.12 ம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்குள்ள மகாவீர் சிற்பம் அச்சணந்தி என்ற முனிவரால் செய்யப்பட்ட தகவல், வட்டெழுத்து கல்வெட்டாக உள்ளது. பாண்டிய மன்னனின் அதிகாரியாக இருந்த வீமன் மீனவன் பள்ளித்தரையன் என்பவரின் பெருமையை வெளிப்படுத்தும் பழமையான வட்டெழுத்து கல்வெட்டு, இம்மலையின் சிறப்பு, என்றார்.மேம்பாட்டிற்கான சுற்றுலா அணியின் திட்டத்தலைவர் பாரதி பேசுகையில், மரபுச்சின்னங்களை பாதுகாப்பது நம் பொறுப்பு. உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்துச் செல்வதன் மூலம், அச்சின்னங்களை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும். தன்னார்வத்துடன், இளைஞர்கள் இதற்காக முன்வரும் போது அதன் தாக்கம், அரசின் முடிவுகளிலும் எதிரொலிக்கும், என்றார். மத்திய தொல்லியல் துறை தென்மண்டல அகழ்வாய்வு அலுவலர் ராஜேஷ், கருங்காலக்குடி ஊராட்சி தலைவர் ஹாஜிராபானு, ஜாபர் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !