தொண்டி கடலில் மீண்டும் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
தொண்டி: தொண்டி கடலில் அடிக்கடி கண்டெடுக்கப்படும் சுவாமி சிலைகளால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். மேலும், சிலைகளில் கைரேகை ஏதும் சிக்காததால் அவற்றை வீசியவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொண்டி தூயசிந்தாதிரை ஆலயம் அருகில் உள்ள கடலில் சில நாட்களுக்கு முன்பு 4 அடி உயர காளியம்மன் சிலை உட்பட 500க்கும் மேற்பட்ட வெள்ளி, பித்தளை, செம்பு சிலைகள் உட்பட மாந்திரீக தகடுகளும் கேட்பாடற்று கிடந்தன. மேலும், பிப்.,8ல், பயணியர் விடுதி அருகே 2 அடி நீளமுள்ள கருப்பணசுவாமி கற்சிலை கிடைத்தது. போலீசார் கூறுகையில், ""கடலிலிருந்து சிலைகள் எடுக்கப்பட்டதால் கைரேகை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. யார்? இச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரம் தெரியவில்லை என்றனர். கோயில் பூஜாரி ஒருவர் கூறுகையில்,""கிராமங்களில் புதிய கோயில்கள் கட்டி புதிய சிலை அமைக்கும் பட்சத்தில் பழைய சிலைகளை கடலில் போடலாம்.சிலைகள் சேதமடைந்தாலும் அவற்றை கடலில் போடலாம். பல ஆண்டுகளாக பூஜிக்கப்பட்டு வரும் சிலைகளை மந்திரவாதிகளின் எண்ணங்கள் நிறைவேறாத பட்சத்தில், இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்றார்.