அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் பந்த சேவை!
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், தண்ணீர் சேவையும், பந்த சேவையும் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, சுவாமி மீது ஊற்றி வழிபட்டனர்.காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாளின் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை தண்ணீர் சேவை துவங்கியது. பக்தர்கள் கருட தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் இருந்து, தண்ணீர் எடுத்து வந்தனர். இவர்கள் கோவிலின் உள்ளே வலம் வந்து, அர்த்த மண்டபத்தில் உள்ள சுவாமி மீது புனித நீரை ஊற்றி வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான தாசர்கள், குடும்பம் குடும்பமாக வந்து கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி, பெருமாளை நினைத்து, பக்தி பரவசமாய், தாரை, தப்பட்டை ஒலியுடன், ரங்கா பராக், கோவிந்தா பராக் என கூறிக் கொண்டு வீதிகளில் வலம் வந்தனர். கோவிலின் உள்ளே சென்று அக்னியால் அரங்கனை வழிபட்டனர். இவ்விழா தொடர்ந்து இரவு பகலாக மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.