விழா காலங்களில் பழநி மலை கோயிலுக்கு செல்ல தனி வழி!
பழநி: பழநி குடமுழுக்கு நினைவரங்கம் அருகே, விழாக்காலங்களில், மலைக்கோயிலுக்கு, பக்தர்கள் செல்வதற்காக நிரந்தரமாக பாதை அமைக்கும் பணி நடக்கிறது. பழநிமலைக்கோயிலுக்கு, தைப்பூசம், பங்குனிஉத்திரம், கந்தசஷ்டி போன்ற முக்கிய விழாக்காலங்களில், ஆயிரகணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதன் காரணமாக, மலைக்கோயிலுக்கு செல்லும் பாதைகளான, யானைப்பாதை பக்தர்கள் ஏறும்வழியாகவும், படிப்பாதை இறங்கும் வழி, என ஒருவழிப்பாதைகளாக மாற்றப்படுகிறது. இதற்காக குடமுழுக்கு நினைவரங்கம் அருகே தற்காலிகமாக, நிழற்பந்தல்கள், தடுப்புகள் அமைத்து, யானைப்பாதையை சென்றடையும் வகையில், வழி அமைக்கப்படுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு விழாவின் போதும், ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவழிக்கப்பட்டது.இதனை, தவிர்ப்பதற்காக, ரூ.50 லட்சம் செலவில், குடமுழுக்கு நினைவரங்கம் அருகே, விழாக்காலங்களில், வரிசையாக பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்காக நிரந்தரமாக, கான்கிரீட் மேற்கூரையுடன், பாதை அமைக்கும் பணி நடக்கிறது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""குடமுழுக்கு நினைவரங்கம் அருகேயுள்ள காலி இடத்தில், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள், மலைக்கோயிலுக்கு செல்வதற்கான பாதை அமைக்கும் பணி ஆகியவை தலா ரூ.50 லட்ச செலவிலும், ரூ.30 லட்சம் செலவில் 20 கழிப்பறைகள் கட்டும் பணியும் நடக்கிறது. இப்பணிகள் வருகின்ற ஜூலைக்குள் முடிக்கப்படும், என்றார்.