திருநெல்வேலி நெல்லையப்பர் கோபுரத்தை மறைக்கும் கட்டடங்கள்!
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை மறைக்கும் வகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோரிக்கை மனுகொடுத்தனர். தமிழகம் முழுவதும் பாரம்பரியமிக்க திருக்கோயில்களின் அழகையும், புராதனத்தையும் காக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 1994ல் ஒரு உத்தரவை வெளியிட்டது. இதன்படி மதுரை மீனாட்சியம்மன், நெல்லையப்பர் கோயில் போன்ற புராதன கோயில்களின் கோபுரங்களை மறைக்கும் வகையில் அதை விட அதிக உயரத்தில் கட்டடம் கட்ட கூடாது எனவும் குறிப்பாக கோயில் அமைந்த பகுதியில் இருந்து ஒரு கி.மீ.,சுற்றளவிற்குள் ஒன்பது மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக கட்டடம் கட்ட கூடாது எனவும் இதனை கண்காணிக்கும் பணியினை சம்பந்தப்பட்ட மாநகராட்சியினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். ஆனால் 1994க்கு பிறகும் ஏராளமான கட்டடங்கள் நெல்லையப்பர் கோயில் கோபுரங்கள் வெளியே தெரியாதபடி கட்டப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து இந்துமுன்னணி அமைப்பினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி நெல்லை மாநகராட்சியில் நெல்லையப்பர் கோயிலை சுற்றிலும் அனுமதியற்ற கட்டடங்களின் எண்ணிக்கையை கேட்டனர். 1994க்கு முன்பு கட்டட கட்டடங்கள் 22 இருப்பதாகவும், 94 அரசு ஆணைக்கு பிறகு கட்டப்பட்ட கட்டடங்கள் 82 இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன. எனவே அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, நெல்லை மாநகராட்சியின் துணைமேயர் ஜெகநாதனிடம் மனு வழங்கினர். இதுகுறித்து மாவட்ட இந்துமுன்னணி தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி கூறுகையில், மாநகராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.