உலகளந்த பெருமாள் கோவில் தேர் சக்கரம் உடைந்தது: அறநிலைய துறை அலட்சியம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் நடந்த, தேரோட்ட உற்சவத்தின் போது, தேரின் முன் சக்கரம் உடைந்ததால், தேர் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகளில், அறநிலையத் துறை அலட்சியமாக செயல்பட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என, பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
திகைப்பு: இக்கோவிலில், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில், ஏழாம் நாளான நேற்று, திருத்தேர் உற்சவம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்ட தேரின் சக்கரங்கள், ஆங்காங்கே சிதிலமடைந்திருந்தன. இதனால், தேர் தள்ளாடியபடியே, பூக்கடை சத்திரம் பகுதியில் சென்றபோது, தேரின் முன்சக்கரம் உடைந்து, நடுவழியில் நிறுத்தப்பட்டது. தேர் சக்கரம் உடைந்தவுடன், செயல் அலுவலர் அங்கிருந்து சென்று விட்டார். இதனால், தேரை இழுத்து வந்த கோடிக்காரர்கள், செய்வதறியாமல் திகைத்தனர். பின், ஆசாரி மற்றும் இரும்பு பட்டறை பணியாளர்கள் மூலம், தற்காலிகமாக தேரின் சக்கரம் சீரமைக்கப்பட்டு, பகல் 1:00 மணிக்கு, தேர் மீண்டும் புறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.
பனிப்போர்: பொதுமக்கள் கூறியதாவது: சக்கரம் சிதிலமடைந்துள்ள நிலையிலேயே தேர் இயக்கப்பட்டதால், திருப்பங்களில் தேரை கட்டுப்படுத்த முடியாமல், சிறு விபத்துகள் ஏற்பட்டன. தேரின் சக்கரம் சிதிலமடைந்துள்ளது என்று தெரிந்தும், தேரோட்டத்திற்கு, பொதுப் பணித்துறை அதிகாரிகள், எப்படி அனுமதி வழங்கினர் என, தெரியவில்லை. சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டிய அதிகாரிகள், சத்தமில்லாமல் அங்கிருந்து சென்றதால், கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கூடாது: இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், தேரை இயக்கக் கூடாது என, நாங்கள் தெரிவித்தோம். கோவில் நிர்வாகத்தினர் பராமரிப்பு பணிகள் செய்யப்படும் என உறுதியளித்ததால், நாங்கள் அனுமதி வழங்கினோம். இது சிறிய விபத்து தான். இதை பெரிது படுத்த வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.